
ஐபிஎல் 15ஆவது சீசனில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெற்றி பெறுவதும் தோல்வியடைவதுமாக இருந்துவருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கும். ஆனால் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது டெல்லி அணி.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 208 ரன்களை அடிக்க, 209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணி வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த படுதோல்வி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நெட் ரன்ரேட்டையும் கடுமையாக பாதித்தது.
இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது டெல்லி அணி. சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் டெல்லி அணிக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.