
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. அதே சமயத்தில் டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இதுவரை தோற்றதில்லை என்கின்ற சாதனையையும் தக்கவைத்து இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் இரண்டு விக்கட்டுகள் வேகமாக விழ ருத்ராஜ் 58 ரன்கள், சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்கள். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங், ஷிவம் தூபே ஆகியோரும் அதிரடி காட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்டியது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் ஆண்டி பால்பிர்னி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.