
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக முதலில் முடிவடைந்த மூன்று போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2 க்கு 2 என்ற நிலையில் சமன் செய்துள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது வழக்கம் போலவே முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் ஹார்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது அபார ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 46 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 55 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.