ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை பாகிஸ்தான் ஆசிய கோப்பையை நடத்த இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்கான பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. பல பேச்சுவார்த்தை, சர்ச்சைகளுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கையில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆசிய கோப்பையில் முதல் 5 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதம் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தான் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் மட்டுமே விளையாடவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டியும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2023 போட்டியில் கலந்து கொள்ளுமாறு பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
இதையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதி லாகூரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் ரோஜர் பின்னி மற்றும் ராஜூவ் சுக்லா பங்கேற்கின்றனர். இதன்மூலம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்பான உறவுகள் மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னி மற்றும் சுக்லா இருவரும் செப்டம்பர் 4 ஆம் தேதி லாகூரில் உள்ள பிசிபி கவர்னர் மாளிகையால் நடத்த திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “ரோஜர் பின்னி, ராஜுவ் சுக்லா மற்றும் பிசிசிஐசெயலாளர் ஜெய் ஷா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லேகெலேயில் நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலை பார்க்க இலங்கை செல்வார்கள். அதன்பிறகு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா, வாகா எல்லையில் இருந்து லாகூர் வரை சென்று விருந்தில் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு, பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல்ரீதியான காரணங்களால், அந்த பிரச்சனை கிரிக்கெட்டிலும் தொடர்ந்தது. கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அதேபோல், கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வரவில்லை. 2012 முதல் இரு அணிகளும் ஐசிசி போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன. ஆனால், தற்போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாகிஸ்தான் செல்வது பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தலைவரின் இந்த புதிய முயற்சியால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் உறவானது மேம்படும். ஐசிசி சாம்பியன்ஸ் போட்டி 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பிசிசிஐயின் இந்த முயற்சிக்குப் பிறகு, இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லலாம். இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்கும் வகையில், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா வர வேண்டும் என பாகிஸ்தானும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்களையும் வரும் காலங்களில் பார்க்கலாம்.
Win Big, Make Your Cricket Tales Now