
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2 ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கிய நிலையில், மழை குறுக்கிட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நியாயமற்ற முறையிலும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி குற்றம்சாட்டி இருந்தார்.