
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராஸ் டெய்லர். இவர் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை நியூசிலாந்துக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7684 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 236 ஒருநாள் போட்டிகளில் 8607 ரன்களையும், 102 டி20 போட்டிகளில் 1909 ரன்களையும் குவித்துள்ளார்.
மேலும் ஐபிஎல்லில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ராஸ் டெய்லர், அபாரமாக பேட்டிங் செய்து அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்தார். அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட ரோஸ் டெய்லர், "Ross Taylor: Black & White" என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். சுயசரிதையில் உண்மைகளை மட்டுமே எழுதவேண்டும் என்பதால், தனது கெரியரில் நடந்த அனைத்து சம்பவங்களையும் உண்மையாக எழுதியுள்ளார்.
இதில் அவர் ஐபிஎல் குறித்து குறிப்பிட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட்டானபோது, ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரோஸ் டெய்லர் 2011ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.