
நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் நிலையில் ஓய்வு பெற்றார்.
பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ராஸ் டெய்லர் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.