
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று நடந்தது. அதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு பின் ரோவ்மன் பாவெல் பேசுகையில், “இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. நேற்று மாலை அணியினர் அனைவரும் சந்தித்து ஆலோசித்தோம். பயிற்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்றே சொல்வேன். அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் எங்களிடம் எந்த அச்சமும் இல்லை. இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தார்கள்.