தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் மட்டுமே அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 50 ரன்கள் அடித்தார். மயன்க் அகர்வால் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். புஜாரா (3), ரஹானே (0) ஆகிய இரு சீனியர் வீரர்களும் சொதப்பினர். ஹனுமா விஹாரி 20 ரன்களும், ரிஷப் பண்ட் 17 ரன்களும் மட்டுமே அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் அபாரமாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் அடித்தது இந்திய அணி.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமை 7 ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. அதன்பின்னர் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். எல்கரும் பீட்டர்சனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.