எஸ்ஏ20 2024: முல்டர் அதிரடி அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 160 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணி தொடக்க வீரர்களாக மேத்யூ பிரீட்ஸ்கி - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பிரீட்ஸ்கியும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Trending
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கிளாசெனுடன் இணைந்த வியான் முல்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அதிரடி காட்டிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென் வீசிய 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சகளை விளாசியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்த கையோடு 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் டுவைன் பிரிட்டோரியஸ் ஒருசில பவுண்டரிகளை விளாசி 23 ரன்களை எடுத்த நிலையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சைமன் ஹார்மெர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now