எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், அடுத்து வந்த விஹான் லூபே 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ரன்கள் ஏதுமின்றியும், எவான் ஜோன்ஸ் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்ட, நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டோனோவன் ஃபெரீரா 14 ரன்களுக்கும், ஹார்டுஸ் வில்ஜோன் 2 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன்களைச் சேர்க்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிகைல் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், செனுரன் முத்துசாமி மற்றும் கிடியோன் பீட்டர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now