பிரபலங்கள் வெளிநாடுகளில் முறைகேடாக வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அதானி குடும்பத்தினர் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பாண்டோரா ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.