
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தற்போது நாடு திரும்பிய வேளையில், அடுத்ததாக ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஆகஸ்ட் 27ஆம் தேதி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. அதற்கு அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட இருக்கின்றன.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹார் அணியில் நீடிக்கிறார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி நீக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய அவர் ஆசிய கோப்பை தொடர் மற்றும் உலகக்கோப்பை அணியில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.