
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் அரசியல் காரணங்களால் விளையாடாமல் இருந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்குத்தான் மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டியும் உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உலகின் எந்த நாட்டு மைதானத்தில் நடந்தாலும், அதற்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும். மேலும் மைதானத்தில் இருநாட்டு ரசிகர்களும் எப்படியும் வந்து சேர்ந்து விடுவார்கள். இப்படி எதிர்பார்ப்புகள் இருந்தும் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் அதிக போட்டிகளில் விளையாடாதது, இருநாட்டு ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளிலும் அதிகபட்சம் ஐந்து போட்டிகளிலும் மோதிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பது ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உலகக் கோப்பை அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க, அதற்கு முன்பாக ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இரண்டு அணிகளும் செப்டம்பர் இரண்டாம் தேதி மோதிக் கொள்கின்றன.