ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் விளக்கமளித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிஃபையர் போட்டியில் நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
Trending
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டேவிட் மில்லர் 38 பந்துகளில் அதிரடியாக விளையாடி 68 குவித்து அசத்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடைந்துள்ளது. அதேபோன்று இந்த போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் கூறுகையில், “நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் நல்ல ரன் குவிப்பை வழங்கியுள்ளோம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் பந்து சற்று நின்று வந்தது அது மட்டுமின்றி பவர்பிளே ஓவர்களில் அதிக அளவு ஸ்விங்கும் ஆனது. இருந்தாலும் நாங்கள் சரியாக பந்துகளை எதிர்கொண்டு நல்ல ஸ்கோரை அடித்தோம். ஆனால் குஜராத் அணி எங்களை விட சிறப்பாக விளையாடி அந்த ரன்களை சேஸ் செய்து விட்டனர்.
இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இந்த போட்டியிலும் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். ஆனால் மைதானம் இரண்டாவது இன்னிங்சில் முற்றிலுமாக பேட்டிங்கை ஒத்துழைத்தால் குஜராத் சேஸிங் செய்து வெற்றி பெற்று விட்டார்கள். இந்தப்போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now