
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார் சானியா.
இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்துவருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அதற்கேற்றாற்போல் இருவரது நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. சானியா மிர்சாவின் சமீபத்திய வலைதள பதிவுகள் அவர் பிரிந்து இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 'உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன. அல்லாவைக் காண' என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்ட அவர், சில தினங்கள் முன் கடினமான நாள்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு தனது மகன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.