
ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 216 ரன்களை குவிக்க பெங்களூரு அணி 193 ரன்கள் மட்டுமே குவித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இப்போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஏற்கனவே முதல் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த சென்னை அணிக்கு இதுவே முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி முதல் 10 ஓவர்களில் 60 ரன்களை மட்டுமே குவித்து 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அடுத்த 10 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் என 88 ரன்களை குவித்தார்.
அதேபோன்று ஷிவம் துபே 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 95 ரன்களையும் குவித்து அசத்தினர். சென்னை அணி முதல் 10 ஓவர்களில் குறைந்தளவே ரன்களை குவித்து இருந்தால் அடுத்த 10 ஓவர்களில் எவ்வாறு விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஷிவம் துபேவின் அதிரடி இந்த போட்டியில் அனைவரையும் அசர வைத்தது என்றே கூறலாம்.