
நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் இரண்டு அணிகளில் ஒன்றாக தகுதி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்று தற்போது அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது.
அதேவேளையில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி லக்னோ அணியை எளிதாக வீழ்த்தி இந்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மிகவும் கடுமையான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.