
முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமானவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள மஞ்ச்ரேக்கர் அவ்வப்போது முன்வைக்கும் விமர்சனங்களும், கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகும். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா குறித்து பாகுபாடு கலந்த வர்ணனை செய்ததற்காக ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஏற்கெனவே இவர் ஆளாகியிருந்தார்.
அண்மையில் கூட அவர் வெளியிட்ட தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினின் பெயர் இல்லை. அதற்கு மஞ்சரேக்கர் கூறிய காரணங்களும் சர்ச்சையானது. இதனால் மீண்டும் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் அவர். பதிலுக்கு அஷ்வின் மீம் ஒன்றை நகைச்சுவையாக பதிவிட்டு சர்ச்சையை முடித்து வைத்தார்.
இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கார் அனுப்பிய பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.