
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களின் முடிவில் 249 ரன்கள் குவித்தது.
பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 40 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் மட்டுமே குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த போட்டியில் மொத்தம் 65 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்திய அணி சார்பாக 63 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 86 ரன்கள் எடுத்து அசத்தினார்.