
இந்தியாவில் நடைபெற்று வரும் 15ஆவது ஐபிஎல் சீசன் நாளை வருகிற 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேளையில், குஜராத் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் அந்த இரண்டாவது அணி எது என்பதனை முடிவு செய்யும் போட்டியாக நேற்றைய குவாலிபயர் 2ஆவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், டு பிளிசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 157 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி அதன் பின்னர் தற்போது தான் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது.
இந்நிலையில் முக்கியமான இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் கூறுகையில், “கடந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் மீண்டும் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இது போன்ற பெரிய தொடர்களில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான்.