
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் தான் பெரும் ரசிகர் கூட்டத்தால் பார்க்கப்படுகிறது. அதனால் ஆடவர் கிரிக்கெட்டுக்குத்தான் தான் வியாபார ரீதியாக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவமும் குறைவு; அதை பார்ப்பவர்களும் மிகக்குறைவு.
ஆனாலும், ஆடவர் கிரிக்கெட்டையும் கடந்து மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க வைத்தனர் சில மகளிர் வீராங்கனைகள். மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகிய இந்திய வீராங்கனைகளை போல, மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததில் முக்கியமானவர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்டர் சாரா டெய்லர். ரசிகர்களை மட்டுமல்லாது, முன்னணி கிரிக்கெட் வீரர்களையும் தனது திறமையால் கவர்ந்தவர் சாரா.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆடிய சாரா டெய்லர், இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும், 126 ஒருநாள் போட்டிகளிலும், 90 டி20 போட்டிகளிலும் விளையாடி 6000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்பெஷலே விக்கெட் கீப்பிங் தான்.