
கடந்த 2019 ஒருநாள் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. அந்த உலக கோப்பையில், லீக் போட்டிகளில் டாப் ஆர்டர் வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியதால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழந்ததால், மிடில் ஆர்டர் சிக்கல் பெரும் பிரச்னையாக அமைந்து, அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இருந்தது அணி நிர்வாகத்திற்கும், தேர்வாளர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் தான் 2017லிருந்தே பல வீரர்கள் மிடில் ஆர்டரில் பரிசோதிக்கப்பட்டனர்.
ஒருவழியாக அம்பாதி ராயுடுதான், 4ஆம் வரிசை வீரர் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கடைசி நேரத்தில் 3டி வீரர் என்று கூறி விஜய் சங்கரை அணியில் எடுத்தனர் தேர்வாளர்கள். ராயுடுவின் புறக்கணிப்பு அனைத்து தரப்பினருக்கும் கடும் அதிர்ச்சியளித்தது.