அரசு மரியாதையுடன் வார்னேவுக்கு இறுதி சடங்கு!
கிரிக்கெட்டின் சிறந்த வீரரையும், தனிப்பட்ட முறையில் நன்கு பழக்கமானவரையும் இழந்த இந்த தருணத்தை என்னால் கடக்க முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான ஷேன் வார்னே நேற்று உயிரிழந்தார். அவருக்கு 52 வயது ஆகிறது.
மாரடைப்பு காரணமாக வார்னே மரணமடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
Trending
தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தீவுகளில் ஒன்றான கோசாமுயில் உள்ள அவரது வீட்டின் அறையில் வார்னே சுய நினைவின்றி மீட்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் வார்னே தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்னேயின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் உலகையும், பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வார்னேயின் உடலை தாய்லாந்தில் இருந்து கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேயும் ஒருவர். எல்லோராலும் போற்றப்படக்கூடியவர். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்” என்றார்.
சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வார்னேக்கு நிகரானவர் யாரும் இல்லை.1969ஆம் ஆண்டு ஆஸ்திரேலியவின் விக்டோரியா மாகாணத்தில் வார்னே பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வத்துடன் இருந்தார். 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்டில் அறிமுகமானார்.
1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியா அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடிய வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2ஆவது வீரர் ஆவார். 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சிட்னியில் விளையாடியது அவரது கடைசி டெஸ்ட் ஆகும்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் வர்ணனையாளராக பணி புரிந்தார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். வார்னே தலைமையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டு அறிமுக ஐபிஎல் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது.
வார்னேயின் மரணம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் வார்னேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “வார்னே உயிரிழந்தது அதிர்ச்சியில் உறையும் வகையிலான துயரமான செய்தி ஆகும். ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர் இருக்கும் சூழலை எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொள்வார்.
அவருடனான தருணங்கள் பொக்கிஷமானவை. விரைவாக மறைந்து விட்ட வார்னே என்றும் இந்தியர்கள் நினைவில் இருப்பார்.
வாழ்க்கை நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. கிரிக்கெட்டில் சிறந்த வீரரையும், தனிப்பட்ட முறையில் நன்கு பழக்கமானவரையும் இழந்த இந்த தருணத்தை என்னால் கடக்க முடியவில்லை. பந்தை சுழற்றுவதில் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்” என தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், முன்னாள் வீரர்கள் ஷேவாக், ஹர்பஜன்சிங், வி.வி.எஸ். லட்சுமணன், காம்பீர், ரெய்னா, சோயிப் அக்தர், சங்ககரா உள்ளிட்ட வீரர்களும் வார்னேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now