வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு இம்மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது.
Trending
இந்த இந்திய ஒருநாள் அணியில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மான் கில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் கலக்கிய தீபக் ஹூடாவும் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல்,ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.வேகப்பந்து பொறுத்தவரை ஆர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்,. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் சாஹலும் தனது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தினேஷ் கார்த்திக்கற்கு ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஷிகர் தவானுக்கு தொடக்க ஜோடியாக இஷான் கிஷனும், மூன்றாவது வரிசையில் சுப்மான் கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தொடரிலும் அவர் புதிய கேப்டனுடன் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த வருடம் இந்திய அணியின் 8ஆவது கேப்டனாக உள்ளார் ஷிகர் தவன். கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
எனினும் ஓய்வு, காயம், கரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா )துணை கேப்டன்),சுப்மான் கில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆர்ஷ்தீப் சிங், சாஹல், ஆவேஷ் கான்.
2022இல் இந்திய அணியின் கேப்டன்கள்
- விராட் கோலி - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்
- கே.எல். ராகுல் - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்
- ரோஹித் சர்மா - இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள்
- ரிஷப் பந்த் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்
- ஹர்திக் பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்
- ஜஸ்ப்ரித் பும்ரா - இங்கிலாந்து டெஸ்ட்
- தினேஷ் கார்த்திக் - இரு டி20 பயிற்சி ஆட்டங்கள்
- ஷிகர் தவன் - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்
Win Big, Make Your Cricket Tales Now