
சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்ஷன் என பல முன்னணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர்.
தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், கிரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது வேகத்தினால் மிரட்டியவர்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சோயப் அக்தர் மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், சிறந்த பேட்ஸ்மேன்களையே தனது பவுன்ஸர்கள் மற்றும் மிரட்டலான பவுலிங்கால் தெறிக்கவிட்டவர். அப்படியிருக்கையில், எதிரணியின் டெயிலெண்டர்களை எப்படி மிரட்டியிருப்பார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.