
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 179 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். இந்த இரண்டு இளம் வீரர்களுமே ஆட்டத்தை அவர்களே முடித்து விட்டார்கள்.
இறுதி நேரத்தில் ஆட்டம் இழந்த ஷுப்மன் கில் 47 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் அணியின் வெற்றியை உறுதி செய்து 51 பந்தில் 84 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி நேற்று இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்தது.
இதற்கு முன்னால் இந்தச் சாதனை தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஜோடியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரரான கில் அவருடைய தரத்திற்கான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் அவர் 10 ரன்களை தாண்டவே இல்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் மீண்டும் திரும்பி வந்தார்.