முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவை முந்திய நாதன் லையன்!
ஆசிய கண்டத்தில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் எனும் ஷேன் வார்னேவின் சாதனையை நாதன் லையன் சமன் செய்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய போது மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.
Trending
இந்த முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக சுழற் பந்துவீச்சாளர் நாதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த ஐந்து விக்கெட்டுகளின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் மறைந்த முன்னாள் ஜாம்பவானான ஷேன் வார்னேவின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை நாதன் லையன் சமன் செய்துள்ளார்.
அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு இதே காலே மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லையன் தற்போது மீண்டும் அதே மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் நாதன் லயன் ஒன்பதாவது முறையாக 5 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார்.
இதில் இந்திய அணிக்கு எதிராக மூன்று முறையும், வங்கதேச அணிக்கு எதிராக மூன்று முறையும், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு முறையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு முறையும் என ஒன்பது முறை ஆசிய கண்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி சார்பாக ஆசிய கண்டத்தில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மறைந்த ஜாம்பவானான ஷேன் வார்னே ஒன்பது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அவரது இந்த சாதனையை தற்போது மாற்றொரு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now