
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திரில்லர் முடிவுகளை கொடுப்பதுடன் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருமானத்தையும் கொட்டிக் கொடுக்கிறது. அதனால் உலக கோப்பைகளையும் அதை நடத்தும் ஐசிசியையும் தரத்திலும் பணத்திலும் மிஞ்சியுள்ள ஐபிஎல் மற்றும் பிசிசிஐ இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.
இதன் வளர்ச்சியை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தினாலும் அவற்றால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. ஐபிஎல் போலவே அதில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் மேலும் பணக்காரர்களாகி வெஸ்ட் இண்டீஸ், துபாய், தென் ஆபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் தங்களது கிளைகளை உருவாக்கி வருகின்றனர்.
குறிப்பாக இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்கள் வரும் 2023 ஜனவரியில் நடைபெற உள்ளது. அதில் ஐபிஎல் தொடரை போலவே நிறைய வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க வைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதே ஜனவரியில் கடந்த பல வருடங்களாக தங்களது நாட்டில் நடைபெறும் பிக்பேஷ் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் கிளை அணிகளுக்காக துபாய் டி20 தொடரில் விளையாட டேவிட் வார்னர் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.