
கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி, நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் முடிவுகளால் ஒருசில மாதங்களிலேயே வெற்றி நடை போட வைத்தார்.
வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், எம்எஸ் தோனி என அவர் வாய்ப்பளித்த அத்தனை வீரர்களும் நாளடைவில் ஜாம்பவான்களாக உருவாகும் அளவுக்கு தரமான வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த பெருமை அவருக்கு அதிகமாகவே சேரும்.
சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்கள்தான் எம்எஸ் தோனி தலைமையில் 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்கள். அவரது தலைமையில் இந்தியா ஒரு உலக கோப்பை வெல்லவில்லை என்றாலும், வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் முகம்மது அசாருதீன் போன்றவர்களை காட்டிலும் நிறைய வெற்றிகளை குவித்தது.