ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் அந்த அணி 2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் - ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ஜனவரி 12 முதல் 17 வரை ஒருநாள் தொடர் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் திடீரென ரத்து செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா. மேலும் 2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை நடத்துகிறது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா.
Trending
ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. டி20 லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் தொடரை ஒத்திவைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது சாத்தியமில்லாததால் தற்போது வேறுவழியின்றி ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை என தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. இதையடுத்து 3 ஆட்டங்களுக்கான புள்ளிகளும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும்.
ஒருநாள் சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே 11ஆம் இடத்தில் உள்ளது. 2023இல் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெறும்.
மீதமுள்ள 2 இடங்களுக்கு தகுதிச்சுற்றின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும். 13 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்களை விட்டுக்கொடுத்ததால் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now