மகளிர் ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்பெற்றது.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இப்போட்டியில் இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்றதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
Trending
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஜிமிமா ரோட்ரிக்ஸ் - ஸ்மிருதி மந்தானா இணை களமிறங்கியது. இதில் ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னிலும், மந்தானா 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் - ஹர்மன்பிரீத் கவுர் இணை நிதான ஆட்டத்தில் ஈடுபட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 54 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 50 ரன்களில் மிதாலி ராஜ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 40 ரன்களில் ஹர்மன்பிரீத் கவுரும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லிசெல் லீ - லாரா வால்வார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை அரைசதம் கடந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 40.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிசெல் லீ 83 ரன்களையும், லாரா வால்வார்ட் 80 ரன்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now