
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதை அடுத்து 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள நிலையில் வரும் மே 29-ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் மாபெரும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கி உள்ளன. குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக மற்ற அணிகளை காட்டிலும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.