ஐபிஎல் 2022: ஜடேஜாவின் கேப்டன்சி விலகலுக்கான காரணத்தை உடைத்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து தோனி முதல் முறையாக பேசினார்.
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி, கேப்டன் பதவியை விட்டு விலகினார். இதனையடுத்து ஜடேஜாவுக்கு அந்த பொறுப்பு வந்தது. ஆனால் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, ஜடேஜா தலைமையில் 8 போட்டியில் விளையாடி 6 போட்டியில் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜடேஜா சனிக்கிழமை அறிவித்தார். இதனால் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கு வந்தது. இதனை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதனால் தோனியை ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.
Trending
இதனிடையே வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் தோனி, “நான் எதையும் வித்தியாசமாக இம்முறை போட்டியில் செய்யவில்லை. இன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி, எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம்.
இதனால் வித்தியாசமான முறையில் பந்துவீசும் சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர். நான் எப்போதும் கூறுவது உண்டு. ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள் என்று சொல்வேன். என்னுடைய இந்த கருத்தை மற்றவர்கள் ஏற்பார்களா என்று தெரியாது.
எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் 7ஆவது ஓவரிலிருந்து 14ஆவது ஓவர் வரை கட்டுக்கோப்பாக பந்துவீசினர். கேப்டன்ஷிப் விவகாரம் பொறுத்தவரை, கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு , அவர் தான் இந்த சீசனில் கேப்டனாக செயல்பட போகிறார் என்று தெரியும்.
முதல் 2 போட்டியில் ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பை நான் தான் கவனித்தேன். அதன் பிறகு ஜடேஜாவிடம் நீ தான் முடிவுகளை அணிக்காக எடுக்க வேண்டும் என்று கூறினேன். கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் மெணக்கிட வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன்ஷியின் அழுத்தம் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதிக்க செய்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now