
இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அளித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டாம் மூடி ஆகியோர் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது, 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில்முறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வீரர்களுக்குப் புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். பிறகு, புதிய ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதால் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்றார்கள்.