
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளையும், 84 20 போட்டிகளில் விளையாடி107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
எனினும் டி20 கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் நிச்சயம் இலங்கை அணிக்காக இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.