டி20 உலகக்கோப்பை: தோல்வி குறித்து வேதனை தெரிவித்த தசுன் ஷனகா!
நியூசிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் சொதப்பியதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27ஆவது போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேன் வில்லியம்சன், டீவன் கான்வே, பின் ஆலன் என அனைத்து நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், தன்னந்தனியாக போராடிய கிளன் பிலிப்ஸ் 64 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தது.
Trending
இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. குறிப்பாக டிரண்ட் பவுல்ட்டின் வேகத்தை சமாளிக்க படாதபாடு பட்ட இலங்கை அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. பனுகா ராஜபக்சே 34 ரன்களும், தசுன் ஷனாகா 35 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாததால் 19.2 ஓவரில் 102 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் சொதப்பியதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தசுன் ஷனாகா பேசுகையில், “பந்துவீச்சின் போது முதல் 10 ஓவர்களை நாங்கள் மிக சிறப்பாகவே வீசினோம். ஆனால் கிளன் பிலிப்ஸ் அனைத்தையும் மாற்றிவிட்டார். அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டதும் எங்களுக்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது.
அதே போல் பந்துவீச்சில் அசுர பலம் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக 160+ ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சாதரண விசயம் இல்லை. குறிப்பாக டிம் சவுத்தி மற்றும் டிரண்ட் பவுல்டின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிக கடினம். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now