IND vs SL: வலிமை வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும் இன்று முதல் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அணி சென்றுள்ளது.
அதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது.
Trending
இலங்கை அணி
வழக்கமாக இலங்கையில் போட்டி நடந்தால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் தற்போது புதிய கேப்டன் ஷனகா தலைமையில் போதிய அனுபவம் இல்லாத வீரர்களே அதிக அளவில் உள்ளனர்.
இதுதவிர இங்கிலாந்து தொடரின் போது கரோனா தடுப்பு விதிமுறையை மீறிய பிரச்னையில் சிக்கிய டிக்வெல்லா, குணதிலகா, குசால் மென்டிஸ் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர். முந்தைய தொடருக்கான கேப்டன் குசல் பெரேரா காயத்தால் விலகினார். ஊதிய ஒப்பந்த விவகாரத்தால் ஆல்-ரவுண்டர் மேத்யூசும் பின்வாங்கி விட்டார். இதனால் இலங்கை அணி பலவீனமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இத்தொடரில் விளையாடும் பல வீரர்கள் இதுநாள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதும் இல்லை. இதனால் வலிமை வாய்ந்த இந்திய அணியிடம் இவர்களின் பாட்சா செல்லுமா என்பது கேள்விகுறி தான்.
இந்திய அணி
விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்க, ருதுராஜ் கெய்க் வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், மனீஷ் பாண்டே என பல அதிரடி வீரர்கள் இருப்பது அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் என பல வேரியேஷன்களைக் கொண்டுள்ள பந்துவீச்சாளர் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேதன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ராணா என பலர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளதால் இவர்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகரிடத்தில் அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
இலங்கை - பாதும் நிசங்கா, மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா, அசிதா ஃபெர்னாண்டோ.
இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
Win Big, Make Your Cricket Tales Now