
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்கவுள்ளது. டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 3 - 0 என வைட் வாஷ் செய்த நிலையில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற முணைப்பு காட்டுகிறது.
இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளது. ஏனென்றால் இந்திய மண்ணில் இந்தியாவை இதுவரை ஒரு டெஸ்டில் கூட இலங்கை வீழ்த்தியதே கிடையாது. இதுவரை நடைபெற்றுள்ள 20 போட்டிகளில் இந்திய அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 7 வருடங்களில் அயல்நாட்டில் கூட இந்தியாவை இலங்கை வீழ்த்தவில்லை. கடைசியாக 2015ஆம் ஆண்டு கல்லேவில் நடந்த டெஸ்டில் தோற்கடித்தது. இதுவரை மொத்தமாக இரு அணிகளும் 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 முறையும், இலங்கை 7 முறையும் வெற்றி கண்டுள்ளன. 17 போட்டிகள் சமனிலேயே முடிந்தது.