வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடக்கவுள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த தொடர்களுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய ஆசிய அணிகளுக்கு ஆசிய கோப்பையும் முக்கியம் என்பதால் அதற்காகவும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
Trending
இந்நிலையில், ஆசிய கோப்பை முதல் டி20 உலக கோப்பை வரை வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவிக்கும் முனைப்பில் உள்ளது வங்கதேச அணி.
ஸ்ரீதரன் ஸ்ரீராம் 2000-2004 காலக்கட்டத்தில் இந்தியாவிற்காக வெறும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி போட்ட காலக்கட்டம், ஏகப்பட்ட தரமான வீரர்கள் நிறைந்த கடும் போட்டி நிலவிய காலக்கட்டம் ஆகும்.
அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சோபிக்க முடியாவிட்டாலும், பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சோபித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.
பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியிலேயே செயல்பட்ட அனுபவம் கொண்டவர் என்பதால், அவர் மீது நம்பிக்கை வைத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. எனவே அவரது வழிகாட்டுதலில் வங்கதேச அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் அசத்தும் என நம்பலாம்.
Win Big, Make Your Cricket Tales Now