
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் புவனேஷ்வர் குமார் செம ஃபார்மில் அருமையாக பந்துவீசிவருகிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 2வது போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எதிர்கொள்ளமுடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர்.
புவனேஷ்வர் குமார் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்வதால் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேயில் வீழ்த்துகிறார். 2வது டி20 போட்டியில் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட் பவர்ப்ளேயில் வீழ்த்தினார். அந்த 3 விக்கெட்டுடன் சேர்த்து புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.