
சமீபத்தில் நடந்துமுடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்பட்ட சட்டேஷ்வர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தி, தனது வருகையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்றுவரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த சதங்களைப் பதிவுசெய்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.