
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2021/22 சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2021 டிசம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கிய இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடந்த முதல் 3 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ செய்து 3 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்த தொடரில் ஜோ ரூட் தலைமையில் விளையாடி வரும் இங்கிலாந்து வழக்கத்தை விட படு மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்த 3 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. இதையடுத்து சிட்னி நகரில் நடந்த 4ஆவது போட்டியில் தட்டுத்தடுமாறிய இங்கிலாந்து வெறும் 1 விக்கெட் கையிருப்புடன் அந்த போட்டியை போராடி டிரா செய்து வைட்வாஷ் தோல்வியை தவிர்த்தது.
இதையடுத்து இந்த தொடரின் 5ஆவது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நேற்று முந்தினம் தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்தது.