
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை.
ஜோஹன்னஸ்பர்க்கில் புஜாரா, ரஹானே பேட்டிங்கைப் பார்த்து எரிச்சலும், வெறுப்பும் அடைந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 2ஆவது இன்னிங்ஸ்தான் அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரஹானே இருவரும் முதல் இன்னிங்ஸில் சொதப்பிவிட்டு, 2ஆவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.