
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வார்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டனான வார்னரை பெஞ்ச்சில் அமரவைத்தனர்.
இந்த சீசனின் நடுப்பகுதியில் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பிருந்து சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டமும் ஆட்டம் கண்டது. வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அமரவைக்கப்பட்டார். வார்னர் என்ற ஒரு சீனியர் வீரர் மட்டும் பெஞ்ச்சில் அமரவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் விளக்கமும் அளித்தார்.