
டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய பின்னர் தற்போது ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். ரோகித் தலைமையிலான அணி நேற்றைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியை வென்றது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என இரு தரப்பினர்களும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். புதிய மாற்றங்கள் உடன் களம் இறக்கப்பட்ட இந்திய அணியில் பல அறிமுக வீரர்கள் உட்பட இளம் வீரர்களுகளுக்கான முக்கியத்துவம் அதிகம் இருந்தது. பேட்ஸ்மேன்களில் நேற்றைய போட்டியில் அதிகப்படியாக கவனம் ஈர்த்தவர் சூர்யகுமார் யாதவ். 40 பந்துகளுக்கு 62 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்திய பெருமை சூர்யகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் 3ஆவது ஆளாக சூர்யகுமார் யாதம் களம் இறங்கினார். வழக்கமாக, மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி இறங்குவார். ஆனால், விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அவருக்கு டி20 தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரிடத்தில் விளையாடிய சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தால் பல பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.