
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது போட்டி செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ப்ரெண்டன் கிங்கை 20 (20) ரன்களில் ஹர்திக் பாண்டியா கிளீன் போல்டாக்கினார். அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுப்பாக செயல்பட்டு 2ஆவது விக்கெட்டுக்கு மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட கெய்ல் மேயர்ஸ் உடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினாலும் கடைசிவரை மெதுவாகவே பேட்டிங் செய்து 22 (23) ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் 17 ஓவர்கள் வரை நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்து 73 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 2 பவுண்டரி 1 சிக்சர் பறக்கவிட்ட ரோவ்மன் போவல் 23 (14) ரன்களிலும் 2 சிக்சரை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் 20 (12) ரன்களிலும் கடைசி ஓவரில் ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.