
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 17 முதல் தொடங்கும் இத்தொடர் நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பகிரங்கமாகவே இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.