
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த தொடரில் முதல் வாரத்தில் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே வெற்றிநடை போட தொடங்கியுள்ளன. அதே சமயம் சென்னை, மும்பை உள்ளிட்ட வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றன.
அந்த வரிசையில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தலைமையில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து படு தோல்விகளை சந்தித்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கியது. அதிலும் பெரிய தோல்விகளை பெற்றதால் தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இதிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் என அந்த அணியின் ரசிகர்கள் கருதுகின்றனர்.