ஐபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச வீரருக்கு அனுமதி மறுப்பு!
மார்க் வுட்டுக்குப் பதிலாக டஸ்கின் அகமத்தைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்த நிலையில் அவரை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மார்க் வுட்டை ரூ. 7.50 கோடிக்குத் தேர்வு செய்தது லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் அணி. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் விளையாடச் சென்ற வுட்டுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
வுட்டுக்குப் பதிலாக வங்கதேச வீரர் டஸ்கின் அகமதுவைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்தது. 26 வயது டஸ்கின் அகமது, வங்கதேச அணிக்காக 10 டெஸ்டுகள், 47 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Trending
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு டஸ்கின் அகமதுவை அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. வங்கதேச அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஏப்ரல் 11 அன்று முடிவடைகிறது. இதையடுத்து இலங்கை அணி, வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இதன் காரணங்களால் டஸ்கின் அகமதுவை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகிகளில் ஒருவரான ஜலால் யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம், சொந்த மண்ணில் இலங்கையுடனான தொடர் என இரு முக்கியமான தொடர்களில் நாங்கள் விளையாட வேண்டும். இந்த நிலையில் டஸ்கின் அகமது, ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது சரியாக இருக்காது என எண்ணினோம். டஸ்கினிடம் நாங்கள் பேசினோம். அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார். ஐபிஎல் போட்டிக்கு வரவில்லை என லக்னெளவிடம் தகவல் தெரிவித்துவிட்டார். தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்திலும் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களிலும் டஸ்கின் அகமது பங்கேற்கவுள்ளார் என்றார்.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதை விடவும் ஐபிஎல் போட்டியில் விளையாட ரபடா, மார்க்ரம் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இந்நிலையில் டஸ்கின் அகமது, ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை விடவும் வங்கதேச அணியில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now